சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம்
தில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சனாதனத்தை அவமதித்தார் என குற்றம்சாட்டி, அவரை செருப்பால் தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு முரணான நடத்தை மற்றும் வழக்கறிஞர்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக எடுக்கப்பட்டதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் காஜூராகோ கோவிலில் விஷ்ணு சிலையின் தலை சமூக விரோத கும்பலால் உடைக்கப்பட்டதை சரிசெய்யுமாறு கோரி வழக்கை தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், விசாரணை நடைபெறும் போது தலைமை நீதிபதி கூறிய சில கருத்துக்கள் சனாதன மதத்தை அவமதிப்பதாக இருந்ததாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சனாதனத்தை அவமதிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி, தாக்க முயன்றதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தில்லி மயூர் விகார் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் கிஷோர், உச்சநீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினராகவும், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவராகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


