புதுடெல்லி, ஆக.30:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியிலிருந்து நடத்தப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, தற்போது கொளத்தூரில் இயங்கி வருகிறது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க, கொளத்தூர் சோமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாணை கடந்த ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ், “கோவில் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தவறு” எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சார்பில் வக்கீல் ஷியாம் மோகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிபிரியா பத்மநாபன் வாதாடினார். அவர், “கோவில் சொத்துகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கும், மத தேவைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனத்திற்காக அளிப்பது, கோவிலின் அடிப்படை நோக்கத்துக்கு முரணானது” என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் வழக்கு தொடர மனுதாரருக்கு என்ன உரிமை உள்ளது? கோவில் நிலம் கல்வி நிறுவனத்துக்குப் பயன்படுத்தப்பட்டால், அதனால் எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது? எந்தவித ஆபத்தும் இல்லாத நிலையில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மனுதாரரின் வாதங்களை ஏற்க முடியாது எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

