காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது: தமிழகம் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது – அன்புமணி விமர்சனம்
சென்னை, ஜூலை 28:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அணையில் இருந்து திறக்கப்படும் தினசரி நீர்வரத்து சுமார் 10.5 டி.எம்.சியாகும். ஆனால், இதில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் நேரடியாக கடலில் கலந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. நிலத்தடி நீர் நிரம்பியிருப்பது, பாசன நீர் தேவை குறைந்திருப்பது போன்ற காரணங்களால் இந்த உபரி நீர் சேமிக்கப்படாமல் வீணாகிறது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் திரு. அன்புமணி இராமதாஸ், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படலாம்; ஏரிகள், குளங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் கொண்டுவரலாம். இவ்வாறு செய்கிறபட்சத்தில் 25 முதல் 30 டி.எம்.சி வரை நீரை சேமிக்க முடியும். ஆனால், திராவிட மாடல் அரசு பாசன அமைப்புகளை மேம்படுத்த அக்கறை காட்டவில்லை.” எனக் கூறியுள்ளார்.
மேலும்,
“தடுப்பணைகள் அமைக்க வேண்டிய இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து, மணல் கொள்ளையில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைதல், கடல் நீர் உள்புகுதல் போன்ற தீவிர விளைவுகள் ஏற்படுகின்றன” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு, நீர் மேலாண்மையில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது என்றும், மணல் கொள்ளையை மட்டுமே முக்கிய கொள்கையாகக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“காவிரி நீர் கடலில் கலக்காமல் தடுக்கும் வகையில், தடுப்பணைகள் அமைத்து, நீர்நிலைகளை இணைத்து கொள்ளளவை உயர்த்தும் முயற்சிகளில் அரசு உடனடியாக இறங்க வேண்டும்,” என்று அன்புமணி
வலியுறுத்தியுள்ளார்.

