சென்னை: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கொடுக்க முடியாது என சொல்ல ஒரு நொடி போதும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அப்படி என்றால் சொல்லித் தான் பாருங்கள் எனவும், வரி செலுத்த முடியாது என்றால் 356 (ஆட்சிக் கலைப்பு) பாயும் என தமிழ்நாடு பாஜக பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.
இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது ஒருபுறம் இருக்க இருமொழிக் கொள்கை தான் தமிழ்நாட்டில் இருக்கும், மும்மொழி கொள்கைக்கோ, இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் இடம் கிடையாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று கடலூரில் பேசிய மு.க.ஸ்டாலின்,” அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவும், செலவு பண்ணக்கூடியவங்க நீங்க.. பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாடு ஐந்தாயிரம் கோடியை இழக்கிறது என்று சொல்கிற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே.. தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல.. எங்களுக்கு ஒரு நொடி போதும்.. மறந்துடாதீங்க.. ஆனால் கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம்.. அதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை” என்றார்.
இதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த முன்னர் ஒப்புக்கொண்டு, தற்போது அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இந்த நிலையில் அப்படி என்றால் சொல்லித் தான் பாருங்கள் எனவும், வரி செலுத்த முடியாது என்றால் 356 (ஆட்சிக் கலைப்பு) பாயும் என தமிழ்நாடு பாஜக மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” வரி தர முடியாது என்றால் 356 பாயும்.” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்,”ஸ்டாலின் மீது அண்ணன் அருணனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அவரை ஆட்சியை விட்டு வீட்டுக்கு அனுப்பாமல் போக மாட்டார் போல இருக்கிறது. 356-ல் இரண்டு முறை இன்றைய அவருடைய கூட்டணி கட்சி காங்கிரசால் வீட்டுக்கு அனுப்பப்பட்டது திமுக ஆட்சி. மீண்டும் வேண்டுமா? ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி காம்ரேட் அருணன் அவர்களே” என பதிவிட்டுள்ளார்.