திருச்சி, திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
மருத்துவக் குழுவினர் மூளைச்சாவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இதில் ஒரு சிறுநீரகம், கணையம் மற்றும் சிறுகுடல் சென்னை தனியார் மருத்துவமனைக்கு, மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு, கல்லீரல் மற்றும் தோல் மதுரை தனியார் மருத்துவமனைக்கு, கண்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதன் மூலம் ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 28-வது உடல் உறுப்பு தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மூளைச்சாவு அடைந்த சிறுவன் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கூம்பூர் வட்டம், பாம்புலுபட்டி பகுதியைச் சேர்ந்த ச. இந்திரகுமார் என்பதும், அவரது தந்தையார் பா. சக்திவேல், தாயார் சந்திரா மற்றும் சகோதரிகள் ஜீவபாரதி, காயத்ரி தேவி, திவ்யதர்ஷினி ஆகியோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஈடுகட்ட முடியாத தியாகத்தைப் பாராட்டி மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் வெ.இரா. சந்திரசேகர், மாநில துணைச் செயலாளர் இரா. இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலாளர் ஆர்.கே. ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தொடர்ந்து உடல் உறுப்பு மற்றும் உடல் தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ், திருக்குறள், எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய புத்தகங்கள் மற்றும் பயனாடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்த சிறுவனின் குடும்பத்தினரை பாராட்டி, திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் 52-வது பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளனர்.

