சர்வதேச யோகா தினத்தில் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு!
கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச யோகா தின விழா திருச்சியில் நடைபெற்றது. சர்வதேச யோக தின விழாவில் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், எச்ஐவி தொற்று உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், சுகப்பிரசவத்திற்கு சுகமான யோகா பயிற்சி அளித்து வருவதுடன் யோகாசனம், பிராணயாமம், கிரியா, முத்திரைகள், பந்தங்கள், தியானம், அஷ்டாங்க யோகம், இயற்கை உணவுகள் குறித்து நூல்கள் வெளியிட்டு மக்கள் உடல் மன ஆரோக்கியத்திற்கு வழிகாட்டி வருகிறார். இருபத்தைந்து முறைக்கும் மேல் குருதி கொடை அளித்து,
தன் வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என உடல் தானத்திற்கு உறுதியற்ற திருச்சி கிஆபெ விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்கு பதிவு செய்துள்ளார். உற்றார், உறவினர்கள், சுற்றத்தார் என காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்ட முதிர் கன்னிகள், கைம்பெண்கள், மூதாட்டிகள்,மாற்றுத்திறனாளிகள்,
முதியவர்கள் என பலதரப்பட்ட உரிமை கோரப்படாத சுமார் ஓராயிரம் ஆதரவற்ற அனாதை பிணங்களை மனைவி மகளுடன் நல்லடக்கம் செய்துள்ளார். பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், அறிவு சார்ந்த சமூகத்தை இலவச நூலகமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகத்தையும் வைத்துள்ளார்.
யோகா ஆசிரியர் விஜயகுமார் உழைப்பு அர்ப்பணிப்பை அங்கீகரித்து கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் தில்ஷத் ஷா பாராட்டுச் சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கி கௌரவித்தார். விழாவில் ஸ்ரீ ஜெயரங்க இயற்கை மருத்துவமனை முதன்மை மருத்துவர் சுகுமார். கோபால்தாஸ் நிறுவனத்தைச் சார்ந்த சிவக்குமார், பிரசாத், ராஜேஷ், கனகராஜ், முகுந்தன், மாரி கேசவன் , ஹேமா, கோபிகா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

