திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்
வெற்றிலை பெட்டி குறித்து முகமது சுபேர் பேசுகையில்,வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலைப் போன்ற பொருள்கள் வைக்கப் பயன்படும் சிறு பெட்டி வெற்றிலைப் பெட்டி ஆகும். கார், மயில், சதுரம், செவ்வகம் என பல வடிவங்களில் வெற்றிலைப் பெட்டி வடிவமைத்துள்ளனர்.வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, சீவல், புகையிலை வைப்பதற்கு தகுந்தாற் போல் சிறு தடுப்பு அறைகள் வைத்திருப்பார்கள். சிலர் அதனுடன், பாக்குவெட்டி என்னும் பாக்கை வெட்டும் சிறு உபகரணம் ஒன்றையும் வைத்திருப்பார்கள்.
குடும்ப விழாக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்துதான் அழைத்திருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிலை என்பது தமிழர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்திருக்கிறது. இன்றும் தெரு ஓரத்தில் இருக்கும் சிறு கடைக்கு ‘வெற்றிலை பாக்கு கடை’ என்பது தான் பெயர். அனைத்துக் குடும்ப விழாக்களிலும் வெற்றிலை முக்கிய அங்கம் இன்று வரை வகிக்கிறது. திருமணத்தை நிச்சயம் செய்யும் விழாவிற்குக்கூட நிச்சய தாம்பூலம் என்பதுதான் பெயர். திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் சீர்வரிசை என்றாலும், இரு குடும்பத்தினரும் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் தாம்பாளம் என்றாலும் வெற்றிலைக்குப் பெரும் பங்கு உண்டு.திருமணம் முடிந்ததும் பெண் வீட்டிற்கு முதலில் போகும் போது, மணப்பெண்ணின் தங்கை மணமகனுக்கு, வெற்றிலை கொடுத்து, வரவேற்கும் வழக்கம் எங்கள் ஊரில் இருந்திருக்கிறது. சில குறும்புக்கார தங்கைகள், சுண்ணாம்பு வைக்காமல் கொடுத்திருக்கிறார்கள். சுண்ணாம்பு வைக்கவில்லை என்றால், வெற்றிலை மிகவும் காரமாக இருக்கும். இன்னமும் சில தங்கைகள் கூடுதலாகச் சுண்ணாம்பு சேர்த்து, மாப்பிள்ளையின் வாயைப் பதம் பார்த்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.சுண்ணாம்பு மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது. அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்க மாட்டாள் என்று பழமொழியும் உண்டு. குடும்ப விழாக்கள் முடிந்து விடை பெறும்போது, வெற்றிலை கொடுத்திருக்கிறார்கள். விடைபெறுபவர் அதைப் பெற்றுக் கொண்டு, விடை பெறுவது விழாவின் முழுமையைக் குறிப்பதாக இருந்திருக்கிறது. அந்த வழக்கமே இன்று வரை ‘தாம்பூலப் பை’ என உள்ளது.முதலில் பாக்கைக் கடித்துக்கொண்டு, வெற்றிலை மேல் , சுண்ணாம்பைத் தடவி மடித்து வாயின் ஓரமாக ஒதுக்கி மெல்வார்கள். ‘விரைவில்’ என்று சொல்லுவதற்குப் ‘பாக்கு கடிக்கும் நேரத்தில்’ எனச் சொல்லுவதுண்டு. மெல்லமெல்ல, சிறிது சிறிதாக வாயின் நிறம் சிவப்பாக மாறத் தொடங்கும். சிலர் அதனுடன் புகையிலையும் சேர்த்துக் கொள்வார்கள். வெற்றிலை மடிக்கும்போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வாய் சிவக்காது; சுவை மாறி விடும்
வயதானவர்கள், இடித்துச் சாப்பிடுவார்கள். அதற்கென உரல் ஒன்று வைத்திருப்பார்கள். ஏறக்குறைய நாம் இப்போது பூண்டு தட்டுவதற்குப் பயன்படுத்தும் உரல்போல இருக்கும். இந்த உரல் கல்லிலும் இருக்கும், பித்தளையிலும் இருக்கும். சிறிய உரலில் வெற்றிலை இடிக்கும் தாளம் இனிமை தான்.சிலர் வெற்றிலை எச்சிலைத் துப்புவதெற்கென தனிப் பாத்திரம் வைத்திருப்பார்கள்.
பூக்கவோ காய்க்கவோ செய்யாமல் இருப்பதால், வெற்று இலை வெற்றிலையாக மருவி இருக்கிறது.
தமிழ் நாட்டில், வெற்றிலை போடும் வழக்கம் குறைந்துவிட்டாலும், இன்றும் வடஇந்தியாவில் பான் என்னும் வெற்றிலை போடும் வழக்கம் இருக்கிறது. கேரளாவிலும் கணிசமானவர்களிடம் வெற்றிலை போடும் வழக்கம் உள்ளது. இப்படி காலம் காலமாக வெற்றிலை போடும் பழக்கத்திற்கு அக்காலத்தில் பித்தளை எவர்சில்வர் போன்ற உலோகத்தில் வெற்றிலை வெட்டியை பயன்படுத்தி உள்ளனர் தற்பொழுது வெற்றிலைப் பெட்டி பயன்படுத்தி வருவது வழக்கொழிந்து விட்டது என்றார்.
பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் விஜயகுமார்,சந்திரசேகரன், இளம்வழுதி, பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர். கல்லூரி கல்விப்புல முதன்மையர், துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை முதுகலை மாணவ மாணவிகள் உட்பட பலர் கண்காட்சியினை பார்வையிட்டனர்.

