எரிவாயு சிலிண்டர் விநியோக லாரிகள் வேலைநிறுத்தம்: தென் மாநிலங்களில் தட்டுப்பாடு அச்சம்
ஈரோடு:
தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் இண்டேன் எரிவாயு நிரப்பும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாள்தோறும் சுமார் 4 லட்சம் எல்பிஜி சிலிண்டர்கள் லாரிகள் மூலம் வீடுகளுக்கு விநியோகமாகின்றன.
இந்த நிலையில், உற்பத்தி திறனை பாதியாகக் குறைத்தது, மேலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் அபராதம் விதிக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பெருந்துறை சிபிக்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைத் தவிர ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு எல்பிஜி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம் தொடங்கியவுடன் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் இதேபோன்ற போராட்டம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
வேலைநிறுத்தம் தீவிரமடைந்தால் தென் மாநிலங்களில் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

