ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்க வந்த நபர் கொடுத்த பணத்தில் ₹10,000 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை காவல் துறை 6 பேரை கைது செய்துள்ளது.
வாலாஜாபேட்டை கடப்பரங்கையன் தெருவைச் சேர்ந்த முத்துராமன் (41) மற்றும் அவரது மனைவி கோசலை (38) ஆகியோர், கடந்த மே மாதத்தில் கோசலையின் 5 சவரன் தங்க நகையை வங்கியில் அடகு வைத்து ₹2,23,000 பெற்றிருந்தனர். பின்னர் முத்துராமன் தனது லாரியை விற்க ராமு (55) என்பவரிடம் ஏற்பாடு செய்தார். லாரியை வாங்க வாலாஜாபேட்டையைச் சேர்ந்த அஸ்கர் பாஷா (49), கீழ்புதுப்பேட்டை அன்னை காளிகாம்பாள் நகர் சர்தார் (48), மேல்விஷாரம் வசீம் (42), இப்ராஹிம், வாலாஜாபேட்டை சிவா (42) ஆகியோர் இணைந்து பணம் கொடுத்து வாங்கினர். அந்த பணத்தில் இருந்து முத்துராமன் வங்கியில் ₹2,35,000 செலுத்தியபோது, பண எண்ணும் இயந்திரத்தில் ₹10,000 கள்ள நோட்டுகள் இருப்பது வங்கி ஊழியர்களால் கண்டறியப்பட்டது. உடனே வங்கி மேலாளர் ராஜராஜன், ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் முத்துராமன் மற்றும் கோசலையை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லாரியை வாங்கிய ராமு, அஸ்கர் பாஷா, சர்தார், வசீம், இப்ராஹிம், சிவா ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களது வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் கள்ள நோட்டு அச்சு இயந்திரம், கணினி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் யூட்யூப் வீடியோக்கள் பார்த்து கள்ள நோட்டுகளை தயாரித்தது என இப்ராஹிம் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தற்போது சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
மாவட்ட சிறப்பு செய்தியாளர்: ஆர்ஜே. சுரேஷ்
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444


