திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி
தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமையில்,
தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்ராஜ் பிலிப், ஆரோக்கிய சாமி,
ராபர்ட் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உள்ளிட்டோர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர்.
பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் பட்டுத்துணி பணம் குறித்து பேசுகையில், பட்டு என்பது ஒரு பன்முகத் துணி ஆகும். உயர்தர ஆடைகள் முதல் ஆடம்பரமான வீட்டு அலங்காரங்கள் வரை, பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது மென்மையான துணியாகும்.
பட்டு துணியினை பணமாக
டாங் வம்சத்தினர் பயன்படுத்தினர்.
கிமு 202 இல் ஹான் வம்சத்தினர் பட்டுப் பாதையைத் தொடங்கினர் மற்றும் மத்திய ஆசியாவிற்கும் மேலும் வெளிநாடுகளுக்கும் வர்த்தக வழிகளை நிறுவினர். 800 ஆண்டுகளுக்குப் பிறகு, டாங் வம்சம் சிக்கலான நிதி மற்றும் வரி முறையை உருவாக்கியது, இது ஜவுளி, நாணயங்களுடன், பணமாக அங்கீகரிக்கப்பட்டது.
பட்டிலான பணம்
டாங் வம்சத்திற்கு பிறகு நீண்ட காலத்திற்கு பட்டு பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்டபோது, உலகின் பல்வேறு பகுதிகளிலும், பட்டுப் பணமாகப் பயன்படுத்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் சிறிய பட்டுத் துண்டுகளில் பணத்தை அச்சடித்து அவற்றை ரூபாய் பணமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜெர்மனியில், பட்டுப் பணத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமானது, உள்ளூர் அல்லது பிராந்திய அரசாங்கத்தின் தேவைகள் அல்லது காகிதத் தட்டுப்பாட்டால் 1923 ஆம் ஆண்டில், பொருளாதார நெருக்கடியின் போது, பல ஜெர்மன் நகரங்களில் பட்டுப் பணம் “அவசரப் பணம்” என்று புழக்கத்தில் இருந்தது. நாளடைவில் பட்டுப் பணம் கைவிடப்பட்டது. இதைப் போல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் வரலாற்று நூல்களை அவசியம் படிக்க வேண்டும் என்றார்.

