திருவனந்தபுரம்:
பண மோசடி வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரை கேரள சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக (சோசப் விசய்) கட்சியின் துணைச் செயலாளர் கிரிப்சன், ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு “பண மோசடியில் நீங்கள் தொடர்புடையவர்; டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்” எனப் பேசி மிரட்டியுள்ளார். இந்தக் குழப்பத்தில் இருந்து தப்பிக்க, ஒரு வங்கிக் கணக்கிற்கு ரூ. 20 லட்சம் செலுத்துமாறு கூறி, ஒரு மாதத்திற்குள் அதை திருப்பித் தருவதாக உறுதியளித்தனர்.
இதனை நம்பிய அஷ்ரப், அந்த தொகையை செலுத்தியதிலிருந்து, நியமிக்கப்பட்ட காலத்துக்குள் பணம் திருப்பி வராததால் திருவனந்தபுரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.
விசாரணையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பேச்சிகுமார் என்பவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்தபோது, கிரிப்சன் என்பவர் கோரியதன் பேரில் தனது கணக்கை வழங்கியதாக பேச்சிகுமார் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்த விசாரணையில், கிரிப்சன் ரூ. 1 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் இந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, கிரிப்சன் மற்றும் பேச்சிகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

