கோவை, மார்ச் 15–
கோவைப்புதூர் 4–வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவைப்புதூர் 4–வது காவல் பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, அதே பட்டாலியனில் பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதற்கட்டமாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து எஸ்.பி. செந்தில்குமார் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

