திருச்சி:
“தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை” ஊக்குவிக்கும் நோக்கில் மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை கிளப் செயலர் விஜயகுமார் துவக்கி உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார், சிறப்பு சொற்பொழிவில் பேசுகையில்,
தமிழ்நாடு வட்டத்தின் மத்திய மண்டலம் இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள “தூய்மை இந்தியா” சிறப்பு அஞ்சல் உறை, தூய்மை, பசுமையை மேம்படுத்துதல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்த்தல் ஆகியவற்றை பொதுமக்களிடையே பரப்புவதற்காக உருவாக்கப்பட்டதாக கூறினார்.
2025 நவம்பர் மாதத்தில் பூண்டி முதல் திருக்காட்டுப்பள்ளி வரை ஒரு மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இந்த சிறப்பு அஞ்சல் உறை,
கிராமப்புற மக்களிடையே “தூய்மை இந்தியா” செய்தியைப் பரப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
அவர் மேலும் கூறியதாவது:
மாட்டு வண்டி, ட்ரோன், பலூன், சைக்கிள், யானை, ரயில் போன்ற பாரம்பரிய மற்றும் தனித்துவமான போக்குவரத்துகளில் பயணிக்கும் அஞ்சல் உறைகள், முத்திரை சேகரிப்போர் உலகில் மிக முக்கியமான நினைவுப் பொருட்களாகும்.
இவற்றில் காணப்படும் சிறப்பு ரத்துச்செய்தல்கள், பயண அடையாளங்கள், அஞ்சல் முத்திரைகள் ஆகியவெல்லாம் விலைமதிப்புள்ள வரலாற்று ஆவணங்களாக கருதப்படுகின்றன என்றார்.
அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16–30 வரை “தூய்மையான மற்றும் பசுமையான இந்தியா” பிரச்சாரம் தபால் துறை மூலம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

