திருச்சி, டிசம்பர் 17 :
பெயர், விலாசம், அடையாளம் தெரியாததும், உரிமை கோரப்படாததும் ஆகிய ஆதரவற்ற அனாதை பிணங்களை மனிதநேயத்துடன், கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு ‘சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
விழாவில், மேனாள் திருச்சி மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் தமிழரசி சுப்பையா, மருத்துவர் விஜய் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில், அமைப்புகளின் நிறுவனத் தலைவர் கே. எஸ். சுப்பையா பாண்டியன், ஆதரவற்ற, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத பிணங்களை உரிய சட்ட நடைமுறைகளுடன் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், யோகா ஆசிரியர் விஜயகுமார் அவர்களுக்கு ‘சிறந்த சமூக சேவகர் – 2025’ விருதை வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற பின்னர் உரையாற்றிய விஜயகுமார் கூறியதாவது:
“ஆதரவற்ற அனாதை பிணம் என்பது உற்றார், உறவினர் யாரும் இல்லாமல், தனிமையில் உயிரிழக்கும் நபர்களின் உடலைக் குறிக்கிறது. இத்தகைய உடல்களை காவல் துறையினருடன் இணைந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்து வருகிறோம். மனநலம் பாதித்தவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், விபத்து மற்றும் இயற்கைப் பேரழிவுகளில் சிக்கியவர்கள் போன்றோர் இவ்வாறு அனாதைகளாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. பெயர், விலாசம், அடையாளம் தெரியாத உடல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் காவல் துறையினர் பதிவு செய்து, உரிமை கோரப்படாத நிலையில் உரிய மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. அந்த மௌனமான ஆன்மாக்களின் இறுதிப் பயணத்திற்கு மரியாதை வழங்குவது மனிதநேயத்தின் கடமை” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் சார்பில் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ், கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருது பெற்றவரை பாராட்டினர்.

