துபாய்: பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற நோக்கத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்து இருக்கிறார்.
அடுத்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசினார். அப்போது பாபர் அசாம் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஆமை வேக இன்னிங்ஸை விமர்சித்துப் பேசினார்.
அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 320 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி சேசிங் செய்தபோது பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். 81 பந்துகளில் தான் பாபர் அசாம் அரை சதத்தையே நிறைவு செய்திருந்தார்.
அவரது ஆட்டம் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் விகிதத்தை வெகுவாகக் குறைத்தது. அதனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரித்தது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 260 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இது பற்றி பேசிய அஸ்வின், “நான் பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகன். ஆனால், சில சமயம் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் புகழ் மற்றும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள விரும்புவார்கள். அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். உங்கள் அணியை விட உங்களின் புகழ் முக்கியமா? பாபர் அசாமின் அந்த ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது.”
“நாட்டுக்காக, அணிக்காக ஆட வேண்டும் என்ற உங்களின் நோக்கம் எங்கே? அதை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டீர்களா? அந்தப் போட்டியில் பாபர் அசாம் விளையாட வந்தபோது தனக்கான ஷாட்களை அவர் உருவாக்கவில்லை. அவரிடம் எந்த ஷாட்டுமே இல்லை. அவர் ஸ்கொயர் கட் ஷாட் அடிக்கவில்லை, ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் செய்யவில்லை, பாட்டம் ஹேண்டிலும் அவர் விளையாடவில்லை. அவர் எந்த ஷாட்டையுமே விளையாடவில்லை. இது போன்ற ஒரு ஆட்டம் 1990-களில் கூட யாரும் ஆடியதில்லை” என்று கடுமையாக பேசினார் அஸ்வின்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள போட்டி பிப்ரவரி 23 அன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி முன்னதாக வங்கதேச அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியிடம் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.