சென்னை:
சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் தியாகராய்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெற்றோரை இழந்த அந்தச் சிறுமி, கோடம்பாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமி புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கோடம்பாக்கம் ஸ்ரீ சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோடம்பாக்கம் ஸ்ரீ மீது இதற்கு முன்பும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2021 ஜூலை மாதத்தில் நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


