கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே மதுவில் வாக்குவாதம் – கல்லால் அடித்து இளைஞர் காயம்
சென்னை, அக். 26:
சென்னையில் நண்பர்களுக்கு இடையேயான வாக்குவாதம் கடுமையான தகராறாக மாறி, ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
கொடுங்கையூர் எழில் நகர், பி-பிளாக், 8-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) எனும் இளைஞர் தனது நண்பர் சதீஷுடன் சுண்ணாம்பு கால்வாய் அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சதீஷ் தனது நண்பர் “டியோ சூர்யா” என்பவரை அழைத்துவந்துள்ளார். முன்பு இருவருக்கும் ஏற்பட்ட பகை காரணமாக, சூர்யா கோபமடைந்து, சதீஷுடன் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் சூர்யா அருகில் கிடந்த கல்லால் மணிகண்டனின் முகத்தை அடித்ததால், அவர் இடது கண் அருகே ரத்தகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அவரின் அண்ணன் வேல்முருகனும் மனைவி பிரியதர்ஷினியும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையிலிருந்து தகவல் பெற்ற எச்-6 ஆர்.கே. நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பவ இடம் மற்றும் மருத்துவமனையில் விசாரணை நடத்தியுள்ளார்.
மணிகண்டனின் புகாரின் அடிப்படையில் சதீஷ் மற்றும் சூர்யா மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

