சென்னை, ஆகஸ்ட் 30:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறிய விவகாரம் தொடர்பாக, 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அதற்கான இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது விசாரணையின் போது வெளிப்பட்டது. வழக்கை முடித்துவைத்திருந்தால் அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, புகார்தாரருக்கும் தகவல் அளிக்கப்பட வேண்டும் எனத் தனி நீதிபதி தெளிவுபடுத்தினார். இதனை செய்ய தவறிய 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அத்துடன் இதை கண்காணிக்க தவறிய சூப்பிரண்டுகள் பி. சரவணன், எம். ஸ்ரீ அபினவ், எஸ். சக்தி கணேசன், எஸ். ஜெயக்குமார், ஆர். ராஜாராம் ஆகியோருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக சூப்பிரண்டுகள் 5 பேரும் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, “விளக்கமின்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்ற சூப்பிரண்டுகள் தரப்பின் வாதத்தை கருத்தில் கொண்டு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கினர்.
இதனால், குறித்த 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தற்காலிகமாக அமலுக்குவராது.

