சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் சில்லறை விவகாரம் தொடர்பாகப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துநர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
சம்பந்தப்பட்ட நடத்துநர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதுடன், கட்டணத்தை UPI மூலம் செலுத்த முன்வந்த பயணியிடம் ஒருமையில் பேசி அவமரியாதையாக நடந்துகொண்டதோடு, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, தொடக்கக் கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கடுமையான உத்தரவை நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பேருந்து சேவையில் பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு முதன்மை என்பதையும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

