சென்னை: தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகையாகக் கருதப்படும் ஆடிப் பெருக்கு இன்று மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் மிகப் பழமையான பண்டிகை எனக் கருதப்படும் ஆடிப்பெருக்கு, ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்களையும், கிழமைகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்டிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் நாளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா என்பதும் சிறப்பம்சமாகும்.
இந்த நாளில், காவிரி உள்ளிட்ட ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை மக்கள் கொண்டாடுவர். காவிரித்தாயை கர்ப்பிணியாகக் கருதி காதோலை, கருகமணி, நவதானியம் தூவி வழிபடும் பழக்கம் உள்ளது. காவிரியில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்குச் சமமான புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
‘பதினெட்டாம் பெருக்கு’ என்றும், ‘ஆடிப்பதினெட்டு’ என்றும் அழைக்கப்படும் இந்நாளில் காவிரிக் கரைத் தலங்களில் பக்தர்கள் கூடி நீர்தெய்வமான அன்னை காவிரியை வழிபடுகின்றனர். “இந்த நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் காவிரித்தாய் எழுந்தருளுவாள்” என்பது ஐதிகமாகக் கூறப்படுகிறது.
நீரைத் தெய்வமாக வழிபடும் மரபை எடுத்துக்காட்டும் விழாவாக ஆடிப்பெருக்கு விளங்குகிறது. உயிர்களின் வாழ்வாதாரமான நீரை மகிமைப்படுத்தும் இந்த பண்டிகை தமிழர்களின் இயற்கை மரபையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

