கடிதம்!…….
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
கடித சேகரிப்பாளர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் லட்சுமி நாராயணன் இளம்வழுதி உள்ளிட்டோர் அவர்தம் சேகரிப்பில் உள்ள நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், வணிகக் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள் என பல வகை
கடிதங்களை காட்சிப்படுத்தி கடிதத் தன்மையை பகிர்ந்து கொண்டனர்.
கடித சேகரிப்பாளர் விஜயகுமார் பேசுகையில்,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. .
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே கொண்டாடப்பட வேண்டிய விஷயமாகிவிட்டது. கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது. இன்று கடிதம் எழுதும் பழக்கமே வழக்கொழிந்து வருகிறது.
முன்பெல்லாம் தபால்காரர் வீட்டு வாசலில் இருந்து ‘சார் போஸ்ட்’ என்றால் வீடு குதூகலமாகிவிடும்.
உற்றார், உறவினர், சுற்றத்தார் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் அந்தக் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதுவார்கள். தேர்வு முடிவும் கடிதத்தில் தான் வரும். அப்பொழுது கடிதம் வரும் பொழுது தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவருக்கும் தபால் வரும் ஒவ்வொரு நிமிடமும் திக்… திக்… நிமிடம் தான். நாளடைவில் தூதஞ்சல் அதாவது கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கணினி மூலம் இமெயில் என தகவல் தொடர்பு அடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்று வாட்ஸ்அப்,, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் .
இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. கடிதம் எழுதுவதை மறந்துவிட்ட இந்தக் காலத்தில் அதை மீட்பதுதான் நமது நோக்கம்.ஒவ்வொருவரும் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். கடிதம் எழுதும் பழகத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நட்பு பாராட்டுவது, நயமாக நாம் சொல்ல வருவதைத் தெரிவிக்கும் பழக்கம் என பல திறமைகள் உருவாகும்.
கடிதம் எத்தன்மைதாயினும் இதன் மூலம் எழுத்து, சிந்தனை, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நயம்படக் கருத்துரைக்கும் பாங்கு, நட்பு பாராட்டுவது எனப் பல திறமைகள் வெளிப்படுகின்றது. இவற்றில் தனி நிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொது நிலைக் கடிதங்கள் சமூகத்திற்கானதாக இருப்பதால் அவை மக்களின் மனங்களில் ஊடுருவி உணர்வோடும் உதிரத்தோடும் கலந்து விடுகின்றன.
தமிழர்தம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் என அனைத்துத் தளங்களிலும் இழந்த அடையாளங்களை மீட்க பல அரசியல் தலைவர்கள் கடிதங்கள் மூலம் முற்போக்குச் சிந்தனைகளையும்,
தொண்டர்களுக்கான அறிவுரைகளையும் நாட்டு நடப்பையும் எடுத்துரைத்துள்ளனர்.மனித வாழ்வின் சாட்சியாகத் திகழும் கடிதத்தின் முக்கியத்துவத்தை இழந்து நிற்கும் இன்றைய தலைமுறையிடம் எழுதும் வழக்கத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் கலாசாரப் பரிணாமம் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமென்றார்.

