ஜாலாவர், ஜூலை 25:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவர் மாவட்டம், மனோகர் தானா பகுதியிலுள்ள பிப்லோடி அரசு பள்ளியில் இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒரே நேரத்தில் பலரது உயிரையும் வாழ்வையும் பாதித்துள்ளது. பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நேரத்தில் வகுப்பறைகளில் மாணவர்கள் இருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக உள்ளூர்வாசிகள் துரிதமாக முனைந்தனர். அவர்கள் தொடர்ந்து போராடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிகழ்வுக்குப் பின்னர் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிரைக் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பள்ளிக் கட்டிடம் கடந்த காலமாகவே பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இதுதொடர்பாக பல முறை புகார்கள் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் உயிரிழந்த துயரச்செய்தி மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தரப்பில் சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடைபெறுவதாகவும், குறைபாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


