திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம் ஈகை சிறகுகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திருச்சி வரலாறு பேசுவோம் நூல் வெளியீட்டு விழா திருச்சி தமிழ்ச் சங்கம் சிற்றரங்கில் நடைபெற்றது. 
திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் திருச்சி வரலாறு பேசுவோம் நூலினை வெளியிட
பத்மஸ்ரீ சுப்புராமன், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கவிஞர் கோவிந்தசாமி , கவிஞர் ஆங்கரை பைரவி, வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
திருச்சி வரலாறு பேசுவோம் நூல் ஆய்வு உரையில் கவிஞர் பாட்டாளி பேசுகையில், திருச்சிராப்பள்ளி வரலாற்றை சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் இந்திரஜித் காலவரிசைப்படி தொடராக 23 கட்டுரையினை மலைக்கோட்டை ,வீரமங்கை ராணி மங்கம்மாளும் திருச்சியும், நாவலன் தீவு பிரகடனம், நட்புக்கோர் இலக்கணம், கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட 2000 ஆண்டு பழமையான கல்லணை, திருச்சிராப்பள்ளியில் பாண்டியர்கள், ராஜராஜ சோழனை சிறை மீட்ட போசளப் பேரரசின் திருச்சி தலைநகர், பெரும்பிடுகு முத்தரையர், திருச்சி முகலாயர்கள் ஆட்சி, விஜயநகர பேரரசு, நாயக்கர் ராஜ்ஜியம் , திருவரங்கம் தீவில் துலுக்க நாச்சியார் ,திருச்சியில் அடையாளமாக திகழும் மெயின் கார்டு கேட், திருச்சியில் சமணர் அடையாளங்கள்,ஆயிரம் ஆண்டுகள் கண்ட திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல்,கிளைவ் ஹவுஸ், உடையார்பாளையம் அரண்மனை , 183 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரியன்னை ஆலய ஓவியங்கள், வின்சென்ட் சர்ச்சிலும் உறையூர் சுருட்டும், நூற்றாண்டு கடந்து ஓடும் கடிகாரமும் நீதிமன்ற வளாகமும், திருச்சியின் அடையாளம் முதலாம் உலகப் போரின் நினைவுச் சின்னம், முக்கொம்பு ,பச்சைமலை என திருச்சியின் வரலாற்றை சோழர் காலத்தில் இருந்து தொடங்கி இடையில் கிபி முதலாம் நூற்றாண்டில் பல்லவர்கள், பாண்டியர்கள் ஆட்சி காலம் இருந்து வந்ததையும் மீண்டும் கிபி பத்தாம் நூற்றாண்டில் இருந்து சோழர்கள் ஆண்டதையும் பின் சோழர்கள் பலம் இழக்க விஜயநகர பேரரசின் கைக்கு மாறியது பின் மதுரை நாயக்கர்கள் அடுத்து ராணி மங்கம்மாள் திருச்சியை தலைநகரமாகக் கொண்டு ஆண்டது என நூலில் உள்ள கட்டுரை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
திருச்சி வரலாறு பேசுவோம் நூலாசிரியர் இந்திரஜித் ஏற்புரையில்
திருச்சிராப்பள்ளி வரலாறு நீண்ட நெடியது ஆங்கிலேயர்கள் கடல் வழியாக வணிகம் மேற்கொண்டதால் அப்பொழுது கடல் சார்ந்த பகுதியினை தலைநகராக அமைத்துக் கொண்டனர் புவியியல் அமைப்பு படி தமிழ்நாட்டின் மையப் பகுதியாக திருச்சிராப்பள்ளி விளங்குகிறது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவை வருங்காலத்தில் பல தொகுதிகளாக இன்றைய சமூகத்தினர் அறியும் வகையில் வெளிவரும் . திருச்சியின் தொன்மையும் மண்ணின் மனத்தின் பெருமையும் வீரத்தையும் அந்நூல் எடுத்துரைக்கும் என்றார்.
முன்னதாக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது சதி வரவேற்க நிறைவாக பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் நன்றி கூறினார்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், நந்தவனம் சந்திரசேகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தனலட்சுமி பாஸ்கரன் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

