சென்னையில் மாா்ச் 19-ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 25 எனவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு கட்டணத்தை அரசு உயா்த்தவில்லை. எனவே, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விலைவாசி உயா்வுக்கேற்ப மீட்டா் கட்டணத்தை உயா்த்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான கட்டண நிா்ணயக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு மே மாதம் ஆட்டோ சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியபோது, 1.5 கிலோ மீட்டருக்கு ரூ. 50 எனவும், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25 எனவும் வழங்கக் கோரினோம். இதனை ஏற்ற கட்டண நிா்ணயிக்குழு தனது பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை மாற்றியமைக்கவில்லை.
12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டா் கட்டணத்தை அரசு உயா்த்தாமல் உள்ளது. இதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2022-க்கு பிறகு போக்குவரத்துத் துறை ஆணையா், அமைச்சா், துறைச் செயலாளா்களுடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை.
ஓலா, உபோ் போன்ற நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 76 வசூலிக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ரூ. 100-க்கு ரூ. 30 வரை ஓலா போன்ற நிறுவனங்கள் கமிஷன் எடுக்கின்றன. எனவே, ஆட்டோக்களுக்கான செயலியை அரசே தொடங்க வலியுறுத்தியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதுபோல பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும். புதிய ஆட்டோக்களுக்கான மானியம் கூட வழங்கப்படவில்லை.
இத்தகைய சூழலில், பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட புகாா்களை பெற க்யூ-ஆா் கோடு ஸ்டிக்கரை ஆட்டோக்களில் ஒட்டும் திட்டத்தை காவல் துறை கொண்டு வந்துள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால், நடைமுறை பிரச்னைகளை விளக்கி, அதிலுள்ள குறைபாடுகள், ஆட்சேபனைகளை களைய தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. அவற்றை காவல் துறை பரிசீலிக்காமல், அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்யாமல் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்நிலையில், மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும், மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் சாா்பில் மாா்ச் 19-ஆம் தேதி காலை 6 முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். இதன்படி சென்னையில் சுமாா் ஒரு லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீத ஆட்டோக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும். தொமுச சங்கம் பங்கேற்கவில்லையென்றாலும், தொழிலாளா்கள் பங்கேற்பாா்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க பிற சங்கங்களுடனும் பேசி வருகிறோம் என்றார் அவர்.