திருச்சிராப்பள்ளி | சிறப்பு செய்தியாளர்
திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து, “திருச்சி – ஓர் பார்வை, ஓர் பயணம்” என்ற தலைப்பில் மரபு நடைப் பயணத்தை உறையூர் பகுதியில் மேற்கொண்டனர்.
இந்த பயணத்தில்,
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,
சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,
சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன்,
வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, உறையூர் சோழன்பாறை கல்வெட்டு அமைந்துள்ள மலைக்குன்றை நேரில் பார்வையிட்டனர்.
சங்ககால தலைநகரான உறையூர்
மலைக்குன்றை பார்வையிட்டு பேசிய விஜயகுமார்,
“சங்ககால சோழர்களின் தலைநகராக உறையூர் விளங்கியது. பிற்கால சோழர்காலத்திலும் இது பெரும் புகழுடன் திகழ்ந்தது” என்றார்.
திருச்சி உறையூர் நகரின் வெளிப்பகுதியில், சோழ நல்லூர் கட்டளை கால்வாய் வடதுருவத்தில் அமைந்துள்ள இந்தச் சிறிய மலைக்குன்று வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
ஒன்பது படிக்கட்டுகள் – ஒழுங்கற்ற அமைப்பு
மலைக்குன்றில் வடக்கில் இருந்து தெற்குத் திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ள ஒன்பது படிக்கட்டுகள் சீரான அமைப்பில் இல்லை.
ஒவ்வொரு படியும் வெவ்வேறு உயரம் மற்றும் அகலத்தில் அமைந்துள்ளன.
மொத்த படி உயரம் : 325 செ.மீ
படி அகலம் : 59 செ.மீ
மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு
ஒன்பதாவது படியை கடந்தவுடன், மலைக்குன்றின் மீது நீள் செவ்வக வடிவில் குடையப்பட்ட மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது.
இந்தக் கல்வெட்டு தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
கல்வெட்டு உட்கூடு உயரம் : 84 செ.மீ
அகலம் : 59 செ.மீ
1890ஆம் ஆண்டில் இந்தக் கல்வெட்டு படியெடுக்கப்பட்டதாகவும்,
தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி – 4ல் இது வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 120 ஆண்டுகளில் இக்கல்வெட்டு பெரிதும் சிதைந்து, தற்போது வாசிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
நிலதானத்தைச் சுட்டும் வரலாற்றுச் சான்று
இவ்வூரில் உள்ள ஜெயங்கொண்ட சோழநல்லூர் எனும் கட்டளை வாய்க்காலை பாதுகாக்கும் தலைவர்களில் ஒருவரால், நிலம் தானமாக வழங்கப்பட்டதைக் குறிப்பதற்காக இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிலையில், அந்தக் கட்டளை வாய்க்காலும், கல்வெட்டும் உருக்கொண்டு அழிந்துவிட்ட நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.
வழிபாடும் இன்றைய நிலையும்
மலைக்குன்றின் மீது, கிழக்கு திசை நோக்கி
ஸ்ரீ முக்தி விநாயகர் மற்றும்
ஸ்ரீ சோழன்பாறை தண்டாயுதபாணி ஆலயங்கள் அமைந்துள்ளன.
கோவில் எதிரே இரும்பு வேல் அமைக்கப்பட்டு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
மேலும் குன்றின் மேற்பகுதியில் வேம்பு, ஆலமரம் வளர்ந்து காணப்படுகிறது.
மலைக்குன்றின் கீழ்பகுதியில், வடகிழக்கு மூலையில் சூலாயுதம் வைத்து பொதுமக்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், சில இளைஞர்கள் இந்த மலைக்குன்றை பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
காலத்தின் சுவடுகளை சுமந்து நிற்கும் உறையூர் சோழன்பாறை, பாதுகாப்பும் முறையான பராமரிப்பும் பெற வேண்டிய வரலாற்றுச் சின்னமாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது.

