அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் – பழைய ஆணையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை
அலுவலகங்களில் பொதுமக்கள் நம்பிக்கை உயர – வழக்கறிஞர் வி.ரமேஷ் குமார் வலியுறுத்தல்
சென்னை, நவம்பர் 7:
அரசு அலுவலர்கள் பணிநேரங்களில் பெயர் மற்றும் பதவி குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை அணிவது கட்டாயம் என, பழைய அரசாணையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வி.ரமேஷ் குமார், பி.ஏ., பி.எல்., உறுதிமொழி ஆணையர், வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் காலத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பெயர் மற்றும் பதவி குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை அணிய வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையைத் தவிர்த்து, பல துறைகளில் அந்த நடைமுறை காணாமல் போயுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாமல் அலுவலர்கள் – மக்களுக்கு சிக்கல்
பொது மக்கள் அரசு அலுவலகங்களில் தங்கள் குறைகளை தெரிவிக்கச் செல்லும் போது, அலுவலர்கள் யார், அவர்களின் பதவி என்ன என்பதையே அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல அலுவலகங்களில் கீழ்நிலை ஊழியர்கள் அதிகாரிகளைச் சந்திக்க விடாமல் தடை செய்யும் சூழல் நிலவுகிறது.
அலுவலர்கள் அடையாள அட்டை அணியாததால், மனு அளிக்கும் நபர்கள் யாரிடம் மனுவை அளிக்கிறார்கள் என்பதில் தெளிவில்லாமை நிலவுகிறது.
மேலும், மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு சரியான ஒப்புகை (Acknowledgement) வழங்கப்படுவதில்லை. சில அலுவலகங்களில் “இனிஷியல்” போட்டு முத்திரை அடிப்பது போல வெறும் கிறுக்கல் செய்து அனுப்புகின்றனர். இதனால் பின்னர் மனு பெறப்படவில்லை என்று கூறும் அலுவலக வழக்கு நிலவுகிறது என வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஒப்புகை வழங்க ஒருவரை நியமிக்க கோரிக்கை
ஒவ்வொரு அலுவலகத்திலும் மனு பெற்றதற்கான முறையான ஒப்புகை வழங்குவதற்காக ஒருவரை நியமிக்க வேண்டும்.
அந்த ஒப்புகையில் மனு எண், பிரிவு, பெறுபவரின் பெயர், கையொப்பம், பெறப்பட்ட தேதி மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி வலியுறுத்தல்
மேலும், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (ஏ) துறைச் செயலர் திருமதி ஸ்வர்ணா அவர்கள் வெளியிட்ட கடிதத்தில்,
சென்னை உயர்நீதிமன்றம் 16.07.2018 அன்று (W.P.No.15640/2018) வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி,
அனைத்து அரசு அலுவலர்களும் குறிப்பாக பொதுமக்களுடன் தொடர்பு கொள்பவர்களும் புகைப்பட அடையாள அட்டைகள் அணிவது கட்டாயம் எனவும்,
அதை மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – வலியுறுத்தல்
அத்தகைய தெளிவான ஆணைகள் இருந்தும், பல அலுவலகங்களில் இன்றுவரை அவை பின்பற்றப்படுவதில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“அரசு துறைகளில் அடையாள நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்களிடம் நம்பிக்கை உயரும். எனவே அரசு மீண்டும் பழைய ஆணையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்,” என வழக்கறிஞர் வி.ரமேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
வி. ரமேஷ் குமார், பி.ஏ., பி.எல்., வழக்கறிஞர் & உறுதி மொழி ஆணையர், பொது மக்கள் விழிப்புணர்வு கவுன்சில் தமிழ்நாடு (பதிவு எண்.88/95) சட்ட ஆலோசகர்


