வேலூர்:
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் (Stroke) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் “Walkathon 2025” என்ற பெயரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையேற்றார். வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலையில், வேலூர் எம்.எல்.ஏ. பி. கார்த்திகேயன் கொடியசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவியர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பக்கவாத விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய சாலைகளில் நடைபயணம் மேற்கொண்டனர்.
முனைவர் ஜி.வி. சம்பத் உரையில் கூறியதாவது:
“இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பக்கவாதம் நோய் அதிகரித்து வருகிறது. துரித உணவு, புகைபிடித்தல், போதைப் பழக்கம், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, மன அழுத்தம் போன்றவையே இதற்குக் காரணம்.
பக்கவாதத்தைத் தடுக்க உடல் ஆரோக்கியம் காக்கும் பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இதை உணர்த்தும் விதமாகவே நறுவீ மருத்துவமனை சார்பில் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
நடைபயண பாதை:
வேலூர் கோட்டை மைதானம் – காந்தி சிலை – காட்பாடி சாலை – சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக நறுவீ மருத்துவமனை வரை நடைபயணம் நடைபெற்றது. பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள்:
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன்
மாமன்ற உறுப்பினர்கள் வி.எஸ். முருகன், ஜெய்சங்கர், சுமதி மனோகரன்
இந்து அறநிலை குழு உறுப்பினர் நீதி (எ) அருணாச்சலம்
நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத்
தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன்
பொது மேலாளர் நிதின் சம்பத்
நரம்பியல் துறை தலைமை மருத்துவர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு சுலோகங்கள்:
“ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்”
“பக்கவாத அறிகுறிகளை உடனே அறிந்து உயிரை காப்போம்”
“விழிப்புடன் இருந்தால் விநாடிகளில் உயிரை காக்கலாம்”
“தக்க நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணம் பெறலாம்”
செய்தி: ஆர்ஜே. சுரேஷ்குமார்தொடர்பு: 91502 23444

