சேலத்தில் போலீசார் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தல் – லஞ்ச வலையில் சிக்கிய 4 போலீசார் கைது!
சேலம் மாவட்டத்தில் அரசு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் போலீசாரே லஞ்சம் வாங்கியதால் அதிர்ச்சி பரவியுள்ளது.
ஆத்தூர் அருகே விவசாயியாக உள்ள சக்திவேல், இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த சக்திவேல், மீண்டும் அதே பிரிவு போலீசாரை சந்தித்து “இனி கடத்தல் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம்?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பிரிவு போலீசார் மாதந்தோறும் ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் செய்தார்.
அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழிகாட்டுதலின்படி ரசாயனப் பவுடர் தடவிய ரூ.15,000 பணத்தை சக்திவேல் கொண்டு சென்று, கொண்டலாம்பட்டியில் உள்ள ஏட்டு ராஜலட்சுமியிடம் நேற்று மதியம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக ராஜலட்சுமியை கைது செய்தனர்.
விசாரணையில், இன்ஸ்பெக்டர் ராஜா ராம், எஸ்.ஐ.கள், சரவணன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அலுவலகத்தில் இருந்த மூவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு ரேஷன் அரிசி ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது மறுக்க முடியாத உண்மை. பெரும்பாலும் இந்தக் கடத்தலில் கூலிக்காரர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் இப்போது போல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


