சென்னையை அடுத்த திருநின்றவூரில் நள்ளிரவில் நடைபெற்ற சுவாரஸ்யமான திருட்டு முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அங்கு உள்ள மகாலட்சுமி ஜுவல்லரி என்ற நகைக்கடையின் ஷட்டரை, அடையாளம் தெரியாத திருடன் ஒருவர் கட்டிங் இயந்திரம் கொண்டு அறுத்துள்ளார். ஒரு மனிதன் நுழையக்கூடிய அளவுக்கு ஷட்டர் வெட்டப்பட்ட நிலையில், அதன் பின்னால் இருந்த கிரில் கேட்யையும் அறுத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார்.
அதன் பின்னர் உள்ள கேஷ் கவுண்டர் மற்றும் நகை டிஸ்ப்ளே தடுப்பையும் அறுக்க முயன்றபோது, கட்டிங் இயந்திரத்தின் பேட்டரி தீர்ந்ததால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருடன் குழப்பத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்த திருட்டு முயற்சியால் எந்த நகையும் கொள்ளையடிக்கப்படவில்லை; இதனால் சுமார் ₹5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று CCTV பதிவுகளை ஆய்வு செய்து, திருடனை தேடி வருகின்றனர்.


