சென்னை: பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்கச் செய்த பெண் காவலருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 16ம் தேதி அதிகாலை 00.25 மணியளவில் திருப்பூர் நகரில் வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் (எண்-1065) கோகிலா, பயணிகள் ஆட்டோவில் தனது கணவருடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கடுமையான பிரசவ வலியால் தவித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி (25) என்பவரை கவனித்தார்.
உடனடியாக ஆட்டோவில் ஏறி கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய கோகிலா, தனது நர்சிங் பயிற்சியினை பயன்படுத்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்கச் செய்தார். பின்னர் தாய் மற்றும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இருவரும் பாதுகாப்பாக திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவரது தன்னலமற்ற, விரைவான மற்றும் அர்ப்பணிப்பான செயலுக்காக, இன்று (20.08.2025) சென்னை தலைமை அலுவலகத்தில் பெண் காவலர் கோகிலாவை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்கள் பாராட்டினார்.

