சென்னை:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்டவாளம் கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 8 மாதங்களிலேயே மட்டும் 228 பேர் இப்படியான விபத்துகளில் பலியாகியுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பாதைகள் வழியாக சட்டவிரோதமாக தண்டவாளத்தை கடக்க முயல்வது, ஓடும் ரயிலில் ஏற முயல்வது, படியில் தொங்கிப் பயணிப்பது போன்றவை உயிருக்கு ஆபத்தான செயல்கள் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு விதிகளை மீறி நடப்பதால் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்க வழிகள் (Subway) போன்ற சட்டபூர்வமான பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது. அதேசமயம், ரயில்வே விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்டவாளம் கடக்கும் போது அசட்டுத்தனமாக உயிரிழக்க வேண்டிய நிலையை தவிர்க்க, அனைவரும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என ரயில்வே மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

