108 திவ்யதேசங்களில் 59 ஆவது திவ்யதேசம்
கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி
சத்யவதியுடன் பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வந்தார். அவர்களுக்கு பிள்ளைபேறு இல்லை. எனவே அந்த முனிவர் பிள்ளைபேறு வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் (சாலி யாகம்) மிகவும் பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் செய்ய தொடங்கினார். தினமும் ஒரு நாளைக்கு 1000 முறை என்ற வகையில் ஒவ்வொருமுறைக்கும் மந்திரத்தில் ஓதி நெய் எடுத்து ஹோமகுண்டத்தில் சேர்த்து ஒரு வருட காலத்திற்கு யாகம் செய்து முடித்தார். யாகத்தின் இறுதி நாளன்று யாகம் முடிவு பெரும் சமயத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஹோம ஜ்வாலையில் தோன்றி முனிவர் செய்த ஹோமத்தில் தான் மனம் மகிழ்ந்ததாகவும் முனிவர் வேண்டுவதை தருவதாகவும் கூறினார். முனிவரும் தனக்கு புத்திர பாக்கியம் அளிக்க வேண்டினார். ஸ்ரீமன் நாராயணனும் அவ்வாறே புத்திர பாக்கியம் அளித்து, அவ்வாறு பிறக்கும் பிள்ளைக்கு முனிவர் செய்த யாகத்தின் பெயரையே சூட்டி சாலிஹோத்திரன் என்று அழைக்குமாறும் ஆசி வழங்கி மறைந்தார்.
பிறகு முனிவரும் ஹோம பிரசாதங்களை தனது மனைவிக்கு அளித்தார். பத்து மாதங்கள் கழித்து புருபுண்யருக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீமன் நாராயணன் உத்தரவுபடி முனிவரும் அந்த குழந்தைக்கு சாலிஹோத்திரன் என்று பெயரிட்டார்.
ஓர் தை அமாவாசை நாளில் சாலிஹோத்ரர் திருவள்ளூர் வந்த போது அங்கிருந்த ஹ்ருத்தாபனாசினி தீர்த்தத்தில் ப்ரம்ஹா உள்ளிட்ட தெய்வங்களும், தேவர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் பலரும் நீராடுவதை கண்டார். உடனடியாக ஓராண்டு காலத்திற்கு பெருமாளை குறித்து கடும் தவம் மேற்கொண்டார். ஒரு வருடம் கழித்து தவத்தை முடித்து சாலிஹோத்ரர் ஹ்ருத்தாபனாசினியில் நீராடி காலை பூஜைகளை துவங்கினார். ஒரு வருடகாலம் உணவும் நீரும் இன்றி மேற்கொண்ட தவத்தை முடித்து, அரிசி மாவு சிறிது எடுத்து அதில் கொஞ்சம் பிரசாதம் தயார் செய்தார். அதை மூன்று பாகங்களாக்கி முதல் பகுதியை ஸ்ரீமன் நாராயணனுக்கு படைத்தார். இரண்டவது பகுதியை அதிதிகளுக்கு விநியோகிப்பதற்கும், மூன்றாவது பகுதியை தனக்கும் வைத்துக்கொண்டார்.
அப்போது ஸ்ரீமன் நாராயணன் ஒர் கிழ பிராமணர் வடிவம் கொண்டு சாலிஹோத்ரர் விநியோகம் செய்ய காத்திருக்கும் இடத்திற்கு வந்தார். அவர் கிழ பிராமணரை கண்டதும் தான் விநியோகம் செய்ய வைத்திருந்த பிரசாதத்தை அவருக்கு கொடுத்தார் . அதை முழுவதும் உட்கொண்ட கிழ பிராமணர் முனிவர் தந்த உணவு போதவில்லை என்றுரைத்தார். இதை கேட்டதும் முனிவரும் தனக்கென வைத்திருந்த பாகத்தை கிழ பிராமணருக்கு அளித்தார். வந்த விருந்தாளியும் திருப்தி அடைந்து சென்றார். மேற்கொண்டு உணவு இல்லாததால், சாலிஹோத்ரர் உணவு நீர் ஏதும் சாப்பிடாமல் மீண்டும் ஒரு வருடகாலம் தவமேற்கொண்டு, அடுத்த புஷ்ய அமாவாசையன்று தவத்தை முடித்து ஹ்ருத்தாபனாசினியில் புனித நீராடி , காலை பூஜைகளை முடித்து நைவேத்யத்திற்கு அரிசி கொண்டுவந்து கடந்த ஆண்டை போலவே மூன்று பாகங்களாக்கி ஸ்ரீமன் நாராயணனுக்கு முதல் பகுதியை நெய்வேத்தியம் செய்துவிட்டு
விருந்தாளிக்கான இரண்டாம் பகுதியையும் தனக்கான மூன்றாவது பகுதியையும் வைத்து காத்திருந்தார். இந்த முறை ஸ்ரீமன் நாராயணன் கிழ பிராமண வடிவில் வந்த போது முனிவரும் பிரசாதத்தை முழுவதுமாக அளித்தார். கிழ பிராமணரும் அவை அணைத்தையும் உண்டு மகிழ்ந்து ‘நான் படுத்து ஓய்வு எடுப்பது எங்கு?
என்று சாலிஹோத்ரரிடம் கேட்டார். சாலிஹோத்ரர் தமக்கான இடத்தைக் காட்டி, ‘இங்கேயே படுக்கலாம்’ என்று கூறவும், மறுகணம் அந்தணர் வடிவில் வந்த அனந்தன் தன் முழு உருவைக் காட்டி, என்ன வரம் வேண்டும், கேள்’ என்றான். தனக்கென அன்றி பிறர்க்கெனவே வாழும் சாலிஹோத்ரர் , அவ்விடம் வரும் அன்பர்கள்தம் கவலைகளை நீக்க வேண்டும் எனக் கோர, அச்சுதனும் அவ்வாறே அருளினான். எவ்வுள் என இறைவனே வினவியதால், இத்தலம் திருஎவ்வுள் என்றானது. இக்கோவில் மூலவரான வீரராகவ பெருமாளின் வலதுகையின் அடியில் சாலிஹோத்திர முனிவர் சிலை இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
மூலவர், உற்சவர் இருவருமே வீரராகவன் என்றாலும், மூலவர் எவ்வுள் கிடந்தான் என்றும் உற்சவர் வைத்திய வீரராகவன் என்றும் அழைக்கப்படுகின்றனர். தாயாரின் திவ்யநாமம் கனகவல்லி (வசுமதி தேவி) என்பதாகும்.
ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் வந்த பெருமாள் ராஜகுமாரியிடம் அவளை மணந்துகொள்ளும் விருப்பத்தை தெரிவித்தார் . அதற்கு ராஜகுமாரி தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் அங்குள்ள ஹ்ருத்தாபனாசினியின் தென் புறம் உள்ள திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ வீரராகவரை வழிபட்டு வருமாரு கோரினாள். ஆனால் வீரநாராயணன் அதனை ஏற்காமல் அங்கிருந்து நகராமல் தான் ராஜகுமாரி மீது கொண்ட காதல் மிகவும் உண்மையானது என்று விவாதிக்கலானான். ராஜகுமரி தனது பெற்றொரை வரவழைத்தாள். அங்கு வந்த ராஜகுமாரியின் பெற்றோர் வீரநாராயணனைப் பற்றி விசாரிக்கையில் தன்னை இன்னரென்று காட்டிக்கொள்ளவில்லை. எனினும் தான் ராஜகுமாரியை மணந்தால் அங்கேயே தங்கி விடுவதாக ஸ்ரீ வீரராகவை மீது ஆணையிட்டு வாக்களித்தார். அந்த வாக்குறுதியை ராஜகுமாரியின் பெற்றோர்களும் நல்லதாக எண்ணி திருமணத்தை நிச்சயித்து முடித்தனர். ராஜகுமாரியின் பெற்றொர்கள் அவர்தம் குல வழக்கப்படி திருமணம் முடிந்ததும் திருமணமான தம்பதியை ஸ்ரீ வீரராகவர் திருக்கோயிலுக்கு ஏனைய உறைவினர்களுடன் அழைத்துச் சென்றனர். கருவறையில் தரிசனத்திற்காக செல்லும் போது அனைவரும் வியக்கும் வண்ணம் வீரநாராயணனும் ராஜகுமாரியும் ஸ்ரீ வீரராகவருடன் ஐக்கியமாகி அவர்கள் ஸ்ரீ வீரராகவர் மற்றும் ஸ்ரீ கனகவல்லி தாயாராக காட்சி அளித்து அணைவருக்கும் அருள்பாலித்தனர். அதன்பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அதுவரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கிய திருப்பெயராக விளங்கிற்று.
திருவள்ளூர் பல்வேறு முனிவர்கள் வாழ்ந்த அடர்ந்த காடாக இருந்தமையால் பிகூஷாரண்யம் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்டது. சுமார் 2000 வருடங்கள் பழமையான இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. 1999 இல் கோபுரங்கள் அணைத்தும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இங்குள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி மிகவும் புனிதமானதாகும். திருக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
இத்திருக்குளத்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும்; மனதில்…… எண்ணும் பாவங்கள் உட்பட அனைத்து பாவங்களும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமாக கருதப்படுகிறது. தொடர்ந்து மூன்று அமாவாசைகளுக்கு இங்கு வந்து நீராடித் தொழுதால் தீராத நோய்களும் தீரும். இத்தலம் புத்திரபாக்கியம் அருளும் தலம் என்றும் கூறப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர். மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பக்தர்கள் இறைவனுக்கு திருக்கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும் துப்பட்டி எனப்படும் மேல் வஸ்திரமும் , தாயாருக்கு 9 கஜ பட்டுபுடவையும் சமர்ப்பிக்கிறார்கள். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.
சைவர்களுக்கு வைத்தீஸ்வரன் கோயில் எவ்வாறோ, அதைப்போல வைணவர்களுக்கு இக்கோயிலாகும். மூலவர், உற்சவர் இருவருமே வீரராகவன் என்றாலும், மூலவர் எவ்வுள் கிடந்தான் என்றும் உற்சவர் வைத்திய வீரராகவன் என்றும் அழைக்கப்படுகின்றனர். தாயாரின் திவ்யநாமம் கனகவல்லி (வசுமதி தேவி) என்பதாகும்.

திருவிழா:
பிரம்மோற்சவம் – தைமாதம் – 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள்.

பிரம்மோற்சவம் – சித்திரைமாதம் – 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

பவித்ர உற்சவம் – 7 நாட்கள் திருவிழா – இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

திறந்திருக்கும் நேரம் :
விஸ்வரூப தரிசனம் காலை 6 .00
பக்தர்கள் தரிசனம் காலை 6 .00 மணி முதல் 7 .30 வரையிலும்,
காலை 8 .45 முதல் 11 .00 வரை , 11 .45 முதல் 12 .00 வரையிலும்,
மாலை 4 .00 – 5 .45வரையிலும், 6 .30 – 8 .00 வரையிலும்,
அமாவாசை நாட்களில் காலை 5 – 00 மணி முதல் இரவு 8 – 30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்
மூலவர்:எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர்:வைத்திய வீரராகவர்
அம்மன்/தாயார்:கனகவல்லி
தீர்த்தம்:ஹிருதாபதணி
ஆகமம்/பூஜை :பாஞ்சராத்திரம்
புராண பெயர்:எவ்வுளூர், திருஎவ்வுள்
ஊர்:திருவள்ளூர்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
தொலைபேசி : 91 – 44 – 2766 0378, அலைபேசி : 97804 19330
ஆலயம் அறிவோம்
ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில், திருவள்ளூர் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.