சிங்கபெருமாள் கோவில் சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர். நெற்றிக்கண்ணுடன் (முக்கண்ணுடன்) பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் அருள்புரிகிறார். ‘பாடலாத்ரி’ என்றால் செந்நிறக் குன்று என பொருள். குடைவரையாக திகழும் கோவில் கருவறையில் அருளும் சுவாமியுடன், ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார், ஸ்ரீதேவி – பூதேவியுடன் உத்ஸவர் ஸ்ரீபிரகலாதவரதர் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

வரலாறு

நரசிம்ம அவதாரக் காலத்தில் இத்தலம், அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. அக்காட்டில் ஜபாலி என்னும் முனிவர் தவம் செய்துவந்தார். பெருமாளை நரசிம்மராகக் காண வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக (கோபமூர்த்தியாக) முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இரணிய வதத்திற்குப்பின் இரத்தக்கறை படிந்த கரங்களை இத்தலத்திற்கு அருகிலுள்ள செங்குன்றக் குளத்தில் கழுவிய பின் இங்கு வந்ததாகக் கூறுவர். முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர்.

மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம்.

ஆலய அமைப்பு

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் நான்கு திருக்கரங்களு டன் காட்சியளிக்கிறார். ஒரு கையில் சங்கும், மறு கையில் சக்கரமும் ஏந்தி, வலது கை அபயம் அளிக்க, இடது கையைத் தொடையில் வைத்துள்ளார். வலது காலை மடித்து வைத்தும் இடது காலைத் தொங்கப் போட்டுக் கொண்டும் நெற்றிக் கண்ணுடன் (த்ரிநேத்ரதாரியாய்) திருமார்பில் மகாலட்சுமியுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

1008 சுலோகங்கள் பொறித்த வெள்ளியால் செய்யப்பட்ட சஹஸ்ரநாம மாலையுடனும் அரக்கு நிற சாளக்ராம மாலையுடனும் அருள்புரிகிறார். மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. தாயார் அஹோபிலவல்லி, உற்சவர்- பிரகலாத வரதன், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியுள் ளார். தல விருட்சம்- பாரிஜாதமாகும். ஆண்டாள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கு தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன. சந்நிதித் தெரு முனையில் அனுமாருக்கு (சிறிய திருவடி) சந்நிதி உள்ளது.

குடைவரையாகத் திகழும் கோயில் கருவறையில் அருளும் சுவாமியுடன், குன்றையும் சேர்த்து கிரிவல மாக வருவது இத்தலத்தின் சிறப்பம்சம் ஆகும். பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

வழிபாடு

நரசிம்ம அவதாரம் பிரதோஷ நேரத்தில் நடந்ததால் பிரதோஷ காலத்தில் நரசிம்ம பெருமாளை வழிபடுவது சிறப்பு. பிரதோஷ காலத்தில் இங்குள்ள ஸ்ரீபிரதோஷ நரசிம்மருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம் ஆகும். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமை களில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.

கிரிவலம் வரும் போது அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்ப தைக் காணலாம். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் விரைவில் அனுகூலமாக தீரும்; கடன் தொல்லைகள் அகலும்; மகப்பேறு உண்டாகும்; திருமணத்தடை நீங்கும். பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் குன்றினை ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். வெல்லம், சுக்கு, ஏலக்காய், எலும்மிச்சம் பழச்சாறு, நீர் கலந்து தயாரிக்கப்பட்ட பானகத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மரை வழிபாடு செய்து அருள் பெறுவோம்.

அமைவிடம்

தாம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலமாகவும், நடந்தும் செல்லலாம்.

ஆலயம் அறிவோம்
நெற்றிக்கண்ணுடன் அருள்புரியும் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஆலயம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.