கர்நாடக மாநிலத்தின் மனிச்சூலா மலைத்தொடரின் கீழ் பிதர் நகரிலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் 300 மீட்டர் நீண்ட குகையில் தொன்மையான நரசிம்ம ஜரனி குகைக் கோயில் உள்ளது.
நரசிம்மர் ஜர்னி குகைக் கோவிலில் உள்ள இறைவனின் உருவம் சுயம்பு . இந்த தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது .
விஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்மர், சிவனின் பக்தரான ஜரசாசூரன் (ஜலசூரன்) என்ற அசுரனை அழித்தார். ஜரசாசூரன் தனது உயிர் பிரியும் நேரத்தில் விஷ்ணுவிடம் (நரசிம்மரிடம்) தான் வசித்து வந்த குகைக்குள் வந்து, பக்தர்களுக்கு வரங்களை அளிக்க வேண்டினான். அவனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நரசிம்மர் குகைக்குள் வந்தார். குகையின் கல் சுவரில் நரசிம்மரின் புடைப்புத் தோற்றம் உள்ளது. கொல்லப்பட்ட அசுரன் பின்னர், தண்ணீராக மாறி நரசிம்மரின் பாதங்களின் கீழ் ஓட ஆரம்பித்தான். அந்த நீர் ஓட்டம் தொடர்ந்து குகையில் ஊற்றாக உள்ளது; கோடைக் காலத்திலும் வறண்டு போகவில்லை.
குகைச் சுரங்கத்தில் நான்கு அடி உயரத்திலிருந்து ஐந்து அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் மார்புவரை உள்ள இந்த நீரில் நடந்துதான் செல்லவேண்டும். இது அதிசயமான கட்டடக்கலையைக் கொண்டதாக உள்ளது. இந்த அதிசய சுரங்கப்பாதையின் முடிவில் அமைந்துள்ள குகைச் சுவரில் நரசிம்மரின் உருவத்தைக் காணலாம். குகையின் விதானமானது எந்தவித கட்டுமானமுமின்றி குகையின் இறுதிவரை தொடர்கிறது இதுவரை இதனால் யாராலும் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் கோவிந்தா கோவிந்தா மற்றும் நரசிம்மா ஹரி ஹரி ஆகிய உச்சாடங்களை பக்தியுடன் கூறிக்கொண்டு செல்கின்றனர்.
குகைக் கோவிலின் முடிவில் நரசிம்மர் மற்றும் ஜரசாசூரன் வழிபட்ட சிவ லிங்கம், நரசிம்மர் ஆகிய இரண்டு தெய்வங்கள் உள்ளனர் .
குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது. தரிசனத்துக்கு சென்றவர்கள் திரும்பும்வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றானது தொடர்ந்து பாய்கிறது. மக்கள் தொடர்ந்து அதில் நடக்கின்றதால், நீர் தெளிவாக இல்லை. பக்தர்கள் தங்கள் குழந்தைகளை நீரில் மூழ்காமல் பாதுகாக்க தங்கள் தோளில் சுமந்து கோயிலுக்குள் செல்கின்றனர். இந்த நீரில் சல்பர் உள்ளது, இதனால் தோல் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான பண்புகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குகைக் கோயிலுக்கு எதிரே சற்று தாழ்வான இடத்தில் ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்துக்கு குகையில் இருந்து வெளியேறும் ஊற்று நீர் வந்து சேருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் மிகுதியாக வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக, குகைக்கோயிலுக்குள் வளிப் பதன வசதி மற்றும் மின் விளக்கு தேவைகளுக்காக மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது. குகைக்குள் இருந்து வரும் தண்ணீரை முறையாக வெளியேற்றுதல், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், பல்நோக்கு மண்டபம், தங்கும் அறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை உருவாக்குதல் போன்ற மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன.
காலை 8 முதல் மாலை 6 மணி வரை இந்த கோவில் திறக்கப்படுகிறது.
ஆலயம் அறிவோம்
ஜரனி நரசிம்மர் குகை கோவில் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.