சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மின்ட் மாடர்ன் சிட்டி பகுதியை சேர்ந்த யூசுப் சையத்(33)என்பவர் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக இரவு பதினோரு மணி அளவில் கண்ணன் ரவுண்டானா அருகே செல்போன் பேசியவாறு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது செல்போனை பறித்துக் கொண்டு அந்த நபரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர். நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த நபர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த 2 வாலிபர்கள் தங்களது நண்பர்களுடன் அந்த இளைஞரை தங்களது வாகனத்தில் துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். இருவரையும் வண்ணாரப்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் இரண்டு இளைஞர்களையும் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மணி(எ)அறுப்பு மணி மற்றும் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதில் அறுப்பு மணி என்பவர் மீது சுற்றுவட்டார காவல்நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.குற்றச் சம்பவங்களை கண்டாலே ஒதுங்கி நிற்கும் பொதுமக்களிடையே மன தைரியத்துடன் சென்று குற்றவாளிகளை பிடித்து கொடுத்த முன்னா, மற்றும் விக்னேஷ், ஆகிய இருவரையும் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், நேரில் அழைத்து பாராட்டினார்.