விபத்தை தவிர்ப்போம் உயிரை காப்போம் என்கின்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் ஆர்.நாராயணபாபு அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசும் போது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் ஏராளமான சாலை விபத்துகள் நடைபெற்று வருகின்றது. விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடுகின்றவர்களை காப்பாற்ற, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போது ஏற்படுகின்ற விபத்தால், ஏராளமானவர்கள் தலையில் அடிபட்டு உயிர் இழக்கும் பரிதாப நிலை ஏற்படுகின்றது. விபத்தால் ஒருவர் குடும்பத்தில் இறந்துவிட்டால், அந்த குடும்பமே பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுகின்றது.

விபத்தில் அடிபடுகின்றவர்களை காப்பாற்றுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், உயிர் காக்கும் சிகிச்சையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றார்கள். உயிர்களை காக்கும் அம்மருத்துவர்களின் பணி மகத்தானது. கொரோனா என்கின்ற கொடிய தொற்று நோயினை பரவாமல் தடுத்து வருகின்றோம். கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அவசியம் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலம் என்பதால் முதியவர்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்துவிட வேண்டும். பொதுமக்களும் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவது தவறு. கொரோனா தொற்று அமெரிக்காவை விட ஐரோப்பாவில் அதிகமாகிவிட்டது. பொதுமக்கள் தங்களுக்கு உடலில் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், விழிப்புணர்வுடன் தங்களை மருந்துப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

வரலாற்று சிறப்பு மிக்க அரசு ஸ்டான்லி மருத்துவமனை விபத்து மற்று அவசர சிகிச்சை பிரிவிலும், கொரோனா தடுப்பு பணியிலும் மகத்தான சேவைகளை செய்து வருகின்றது. இம்மருந்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி, அனைத்துத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பி. பாலாஜி பேசும் போது நமது அரசு ஸ்டான்லி மருத்துவமனை 230 வருட பாரம்பரியம் மிக்க மருத்துவமனை. இம்மருந்துவமனை வடசென்னை மக்களுக்கு அரிய மற்றும் உரிய சிறப்பு மருத்துவ சேவைகளை செய்து வருகின்றது. வடசென்னை பகுதி தொழிற்சாலைகள், துறைமுகம் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் சாலை விபத்து, தொழிற்சாலை விபத்து மற்றும் பல விபத்துகள் ஏற்படுகின்றது. நமது அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சிறப்புற சேவைபுரிந்து வருகின்றது.

ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 2000 விபத்து நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு வரும் நொயாளிகளுக்கு ஒரே இடத்தில் எல்லாவித சிறப்பு மருத்துவப் பிரிவு மருத்துவர்களால் குறுகிய நேரத்தில் திறம்பட சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரே இடத்தில் அனைத்து பரிசோதனைகளும், பொது அறுவை சிகிச்சை, எலும்பு அறுவை சிகிச்சை, மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, இருதய மற்றும் இரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, கண் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் திறம்பட சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் 60 சதவீத அறுவை மற்றும் பிற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது. தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை நெறிமுறைகளால் அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னதாக ஸ்டான்லி மருத்துவமனையின் எலும்பு முறிவு துறை, பொது அறுவை சிகிச்சை துறை, பிளாஸ்டிக் சர்ஜரி துறை, மயக்க மருந்து துறை ஆகியவற்றின் சார்பில், விபத்தில் அடிபட்டு வருகின்றவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கி காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஏ.ஜமிலா, மருத்து கண்காணிப்பாளர் டாக்டர் ஜெ.கணேஷ், மருத்துவமனை நிலைய மருத்துவர் ரமேஷ், மகப்பேறு மருத்துவமனை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கே.கலைவாணி உட்பட அனைத்துத்துறை தலைவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து மருந்துப் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள். பொது அறுவை சிகிச்சை மருத்துவத்துறை தலைவர் டாக்டர் டி.சிவக்குமார் வரவேற்றார். பொது அறுவை சிகிச்சை மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ஆர். மணிவண்ணன் நன்றி கூறினார்.