ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் வடசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் இருப்பதால் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு இங்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளியின் உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா வார்டு மற்றும் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளை மருத்துவமனை ஊழியர்கள் முறையாக கவனிக்கவில்லை எனவும், தங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கக்கோரியும் மருத்துவமனை வளாகத்தில் நோயாளியின் உறவினர்கள் திடீர் முற்றுகையிட்டு கல்லறை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து ராயபுரம் போலீசார் உதவி ஆணையாளர் தினகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் தற்போது இருப்பதை விட வார்டில் அதிகளவில் செவிலியர்கள் பணியமர்த்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.