சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்

சென்னையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை தடுக்க காவல் துறை ஆணையர் உத்தரவின்பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, மேற்பார்வையில் உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர் ரவி, தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர் பிரவீன்குமார், காவலர்கள் ஷேக்முகமது, ஜீவா, பாலமுரளி, ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனையாளர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் கல்லூரி மாணவர்களை வைத்து ஆங்காங்கே கஞ்சா விற்பனை செய்து வந்தது தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் கஞ்சா வாங்குவது போல ஏற்கனவே கஞ்சா வாங்கியவர்களிடம் கஞ்சா விற்பனை செய்தவரின் தொடர்பு எண்ணை வாங்கி அந்த எண்ணை சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம் என கஞ்சா விற்கும் கும்பல் கல்லூரி மாணவர்களை வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் பகுதியில் அந்த கும்பல் கஞ்சா விற்க வருவதை சைபர் கிரைம் மூலம் அறிந்த தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கஞ்சா வாங்குவதுபோல சென்று அங்கு கஞ்சா பொட்டங்களை விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 4 செல்போன், கத்தி, 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் சதீஸ் என்கிற சதீஸ் குமார், கல்லூரி மாணவர்கள் எட்வின் ராபர்ட் மற்றும் அஜித்குமார் என தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆவடி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான பூஞ்சோலை என்பவர் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும், அவருடைய கூட்டாளியான செங்குன்றம் பகுதியை சேர்ந்த சதீஸ், பூஞ்சோலையில் மனைவி சசிகலா உடன் இணைந்து கஞ்சா போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களை வைத்து சென்னையில் கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. உடனடியாக ஆவடி பகுதியில் இருந்த சசிகலாவையும் கைது செய்த தனிப்படை போலீசார் 4 பேர் மீதும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்