சென்னை வியாசர்பாடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களபணியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன், கலந்து கொண்டு களபணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களில் கொரோனா பரவல் விகதம் குறைந்து உள்ளது.

கொரோனா பரவல் இரட்டிப்பு என்பது தற்போது 67 நாட்களுக்கு இடையே உள்ளது. 15 நாட்களில் இரட்டிப்பு ஆன பாதிப்பு தற்போது 67 நாட்களில் இரட்டிப்பாகும் நிலை உள்ளது.

கொரோனா பயம் போன உடன் களபணியாளர்களுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை மக்கள் தவிர்த்து வருகின்றனர். கொரோனாவை முழுவதுமாக தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம்.

முதல்வரின் பல்வேறு கொரோனா தடுப்பு திட்டங்களால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதி ஏதும் இல்லை.

கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் இரண்டாம் அலை வீசிவிடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் கூறப்படும் ஓலச்சுவடிகள் காணாமல் போனது எனக்கூறுவது பொய்யான தகவலாகும். அர்த்தமற்ற அரசியல் குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பினர் கூறி வருகின்றனர்.

திமுகவின் செயல்பாடு மக்களிடம் மட்டுமில்லாமல் அக்கட்சியினரிடையே அதிரிப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் மாற்று கட்சியில் இணைகிறார்கள் என அவர் தெரிவித்தார்.