தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வெளிவரும்
சிறப்பு அஞ்சல் உறை
நோக்க கருத்துரையில் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான செம்மொழி தமிழ் மொழி நோக்க‌ கருத்துரையினை அச்சிட்டு நடைமுறைப்படுத்த திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பு ஆனாலும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான விஜயகுமார் தமிழ்நாடு அஞ்சல் வட்ட முதன்மை அஞ்சல் தலை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனுவில்,
இந்திய அஞ்சல் துறையினரால் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு முத்திரை வெளியிடுவதன் மூலம் முக்கிய நிகழ்வுகள் நினைவுகூறப்படும் அளவுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஒரு நிகழ்வு அல்லது வருடாந்திர வெளியீட்டு திட்டத்தில் ஒரு நிகழ்வாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடுவதன் மூலம் அந்நிகழ்வு நினைவு கூறப்படுகிறது.
அவ்வாறு வெளியிடப்படும் சிறப்பு அஞ்சல் உறை முன்பக்கம் இடதுபுறம் சிறப்பு நிகழ்வுகளை விளக்கும் படம் இடம் பெற்றிருக்கும். வலதுபக்க மேல்புறம் அஞ்சல்தலை ஒட்டுவதற்கான இடம் பெற்றிருக்கும். அஞ்சல் தலை மீது நிகழ்வுக்கான சிறப்பு முத்திரையும் அச்சிடப்படும். அஞ்சல் உறையின் பின்பக்கம் சிறப்பு அஞ்சல் உறை நோக்கம் குறித்த கருப்பொருட்கள் கருத்து இடம்பெறும்.
அஞ்சல் உறை நோக்கம் கொண்ட கருப்பொருட்கள் விளக்கமானது ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.
தற்பொழுது வெளிவரக்கூடிய சிறப்பு அஞ்சல் உறை நோக்க கருத்துரையானது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி விளக்கத்துடனே வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் மாநில மொழியான கன்னடம்,ஹிந்தி, ஆங்கில மொழியில் கருத்துரை அச்சிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அச்சிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ்நாடு மாநில ஆட்சி மொழியினை சிறப்பு அஞ்சல் உறை நோக்க கருத்துரையில் இடம்பெற வேண்டும்.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும்.
பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும்.
அத்துடன் இந்திய அரசியலமைப்பின், எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. எனவே தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் இருந்து வெளிவரும் அனைத்து சிறப்பு அஞ்சல் உறையிலும் நோக்க கருத்துரை மும்மொழி கொள்கைப்படி தமிழ் மொழி முதலிலும், பின்பு ஹிந்தி, ஆங்கிலத்திலும் அச்சிட்டு நடைமுறைப்படுத்தமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்நடவடிக்கை தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ்நாடு மக்கள் சிறப்பு அஞ்சல் உறையை புரிந்து கொள்வதற்கும் வழிவகையாய் அமையும் என திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.