வேலூர் மாவட்டம்

கஞ்சா விற்பனை செய்த தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தப்பி ஓடிய மேலும் 4 மாணவர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

வேலூரை அடுத்த காட்பாடியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக விடுதியிலும் வீடு வாடகைக்கு எடுத்தும் தங்கியுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் சிலர், பல்கலைக்கழகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செல்வம் நகரில் சேகர் என்பவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சாவைப் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீஸார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் 12 மாணவர்கள் இருந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள், தங்களை விட்டுவிடுமாறு காவல்துறையினரை மிரட்டியுள்ளனர். திடீரென வீட்டுக்குள் இருந்து பெரிய வளர்ப்பு நாய் ஒன்றை அந்த மாணவர்கள் காவல்துறையினர் மீது பாயவிட்டனர். காவல்துறையினர் சற்று தடுமாறிய நேரத்தில் முக்கிய குற்றவாளிகளான 4 மாணவர்கள் பின்பக்கக் கதவு வழியாகத் தப்பி ஓடிவிட்டனர். 8 பேர் சிக்கிக் கொண்டனர்.

மாணவர்களைக் கைதுசெய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.15,00,000 மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அகத்தியர் தெருவைச் சேர்ந்த சத்யா (20), ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மோனீஸ் (20), பண்டிபுல்லா மித்ரசாய் பாலாஜி (19), நெல்லூரைச் சேர்ந்த சேட்டு சித்திக் (19), ரௌலி பூர்ணா சந்திரா சாய் (20), தெலங்கானா மாநிலம் ரவிகொண்டா பகுதியைச் சேர்ந்த மாரி நிக்கில் ரெட்டி (21), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமேரா தினேஷ் (20) உட்பட 8 பேரும் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படித்துவருவது தெரியவந்தது.

தப்பி ஓடியவர்களில் கடப்பாவைச் சேர்ந்த மித்தா திருமா பாஸ்கர்ரெட்டி (21), நாதசிவா நாயுடு (20) உட்பட 4 மாணவர்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனத்தெரியவந்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் சில மாணவர்களும் சொகுசு வாழ்க்கைக்காக இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும், வெளியில் தங்குவதால் பல்கலைக்கழகத்தின் நேரடியான பார்வையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.