நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் ஏடிஎம் மையங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பகுதியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு முன்னிலை வகித்தார். வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி இணைபதிவாளர் ஜெயம் வரவேற்றார். இவ்விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெலக்கல்நத்தம், வேலூர், பரதராமி மற்றும் அரக்கோணம், அணைக்கட்டு ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் ஏடிஎம் இயந்திரங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8 சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு ₹20 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர்கபில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், நாட்றம்பள்ளி தாசில்தார் உமாரம்யா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…