சென்னை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியை சேர்ந்த விஜய்(17), ராகுல்திராவிடகுமார்(17) ஆகிய இருவரும் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றனர்.

அப்போது விஜய் மற்றும் ராகுல் இருவரும் கடல் அலையில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதியில் இருந்த மீனவர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ராகுலை மயக்க நிலையில் மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்கா அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விஜயும், ராகலும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு சிம் கார்டு விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததும், நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றபோது ராகுல் கடலில் மூழ்கி உயிரிழந்ததும், விஜய் கடலில் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் கடலில் மாயமான விஜயை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.