வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கீழ்விசாரம், ஹசிம் நகரைச் சேர்ந்த நாசிஹுருல்லா மகன் அஹமதுல்லா(63). இவர் கடந்த 17ஆம் தேதி துபையில் இருந்து வந்துள்ளார். பின்னர், அவரிடம் கொரானா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அஹமதுல்லா, வாலாஜா அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆற்காடு அருகே ஆணைக்கால் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும் கொருனா அறிகுறிகளுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலுள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதேசமயம், கொரானா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் வியாழக்கிழமையும் காலையும் பெரும்பாலான இளைஞர்கள் பொது இடங்களில் நடமாடிக் கொண்டுள்ளனர், மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வந்த வண்ணமாக இருந்தனர். அவர்களை வீடுகளுக்கு செல்லும்படி போலீஸார் கண்டிப்புடன் அறிவுறுத்தினர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்