வீரமாமுனிவர்
(நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் வீரமாமுனிவர் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் ஜோசப் பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.

இந்தியாவில் தொகு
இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார்.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி, போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று “ாாாா” சேர்த்தேழுதுவது வழக்கம். “ஆ” என எழுத “அர” என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி “ஆ, ஏ” என மாறுதல் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும்.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தார்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
1728-இல் புதுவையில் இவரின் “பரமார்த்த குருவின் கதை” என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாவரல்லர்.

வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்:

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம்
பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் “வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்” எனக் குறிப்பிடுகிறார்.
என்பதை வரலாற்றில் நவம்பர் எட்டாம் தேதி வீரமாமுனிவர் பிறந்தநாள் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துக் கூறினார்.