நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் பெரும்பாலான மக்கள் பொது இடங்களுக்கு சென்று வருவது உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர, பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட போதிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்றவைகளும் இயக்கப்பட்டு வருவதால் இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் அரசு அதிகாரிகளும், போலீஸாரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருவதை நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, இந்த ஊரடங்கு காலத்தில் மிக முக்கிய அவசியத் தேவைகளின்றி மக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், இந்த ஊரடங்கு உத்தரவுக்கு வேலூர் மாவட்ட மக்களிடையே போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையே நிலவுகிறது.

வேலூர் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜவுளி, நகைக்கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கடந்த ஒரு வாரமாகவே மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள், உணவகங்கள், இறைச்சி, பால் கடைகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தேநீர் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு, தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி, கர்நாடக மாநில எல்லையான பேர்ணாம்பட்டு அருகே பத்ரப்பள்ளி சோதனைச் சாவடி மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தடுப்பு வேலிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், கார்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன.
இதேபோல், வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர, நான்கு சக்கரங்களில் மக்கள் அதிகளவில் பொது இடங்களுக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர். வேலூரில் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளிலும் வழக்கம்போல் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அவ்வாறு பொதுஇடங்களுக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் சுவாச கவசம் அணிந்திருப்பதையும் காண முடிகிறது. ஒரு சில ஆட்டோக்களும் இயங்கிக் கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவைத் தடுக்க மக்கள் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து வீடுகளிலேயே இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், அவற்றை பொருட்படுத்தாமல் பெரும்பாலான மக்கள் வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் இதனைக் கட்டுப்படுத்துவதில் அரசு அதிகாரிகளும், போலீஸாரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.