சென்னை அயனாவரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

சென்னையில் உள்ள மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியில் அமர்த்தி மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தமிழர்களுக்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்தி தந்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீட்டிலேயே கொண்டாட அரசு அறிவுருத்தியுள்ளது.

அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி என்பது பெரிய சவாலாக உள்ளது. அதனாலேயே திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் என்ற கட்டுப்பாடு வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் இருந்து தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்படும்.

கொரோனா பரவலில் சங்கிலி தொடரை உடைப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு பாதிப்பு வந்தால் அவரை சார்ந்த அனைவரையும் நாமர கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படும். மக்களும் இந்த முழு ஊரடங்கின் தேவையை உணர்ந்து ஒத்துழைப்பு தருகின்றனர்.

கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை நாடி வாருங்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகளவில் கட்டணங்கள் விதிக்கப்படுவதாலும், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்.

அதிமுகவின் ஐந்தாண்டு சாதனை மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவின் சாதனை, எம்ஜிஆரின் சாதனை என அனைவரின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சென்று தேர்தலை சந்திப்போம்.

அதிமுக எப்போதும் ஒற்றை தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. இதில் குழுப்பத்தை ஏற்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர்.

தங்களின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல எதிர்கட்சிகளுக்கு ஒன்றும் இல்லாததால் அரசின் மீது குழுப்பத்தை ஏற்படுத்துவதிலேயே குறியாக செயல்பட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் நல அபகரிப்பு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, ஊழல் போன்றவை அதிகளவில் இருந்தது. அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது என அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி அரவிந்தன் ஐஏஎஸ், புளியந்தோப்பு துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.