சென்னை புளியந்தோப்பில் ஆட்டு தொட்டியில் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக அப்பகுதியில் இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகளுடன் இறைச்சி கடைகள் இயங்கலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தும் தங்கள் பகுதியில் மட்டும் இறைச்சிக் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறுகின்றனர்.

எனவே இதனை நம்பியே வாழ்ந்து வரும் இறைச்சி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பெரம்பூர் அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் சுமார் 300ற்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிறகு சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைஅடுத்து ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக இறைச்சி கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சென்னை முழுவதும் அனைத்து ஆட்டு இறைச்சி வியாபாரி சங்கத்தினர் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு காப்பாளர் அன்பு வேந்தன் தெரிவித்தார்.