சென்னை தண்டையார்பேட்டை வீராகுட்டி தெருவை சேர்ந்தவர் கேசவன்(40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆவார். இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். இதில் கேசவனுக்கு பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் வீராகுட்டி தெருவை சேர்ந்த மதன் என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாகவும், இதனை கேசவன் காவல் துறையினருக்கு கூறியதால் ஆத்திரத்தில் இருந்த மதன் கேசவனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றது காவல் துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கேசவனை வெட்டிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.