சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு ஊழியா்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார். அப்போது பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்த துப்புரவு ஊழியர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு சென்றதால் அங்கு சமூக விலகல் காற்றில் பறக்கவிடப்பட்டது.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

ராயபுரத்தில் உள்ள வட்டங்களில் உயிரை துச்சமென மதித்து சிறப்பான பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் பண பரிசும், மளிகை பொருட்களும் நலத்திட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசும், அரசு துறைகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் இந்நிலையை உருவாக்கலாம்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.

மாநிலத்தில் நிதி தன்னாட்சி என்பது முக்கியம். வரி விதிக்கும் அதிகாரம் மாநிலத்திற்கு இருந்தால் தான் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து மக்களுக்கு நல்லதை செய்ய முடியும். அரசு வருமானத்தில் ரூ.70 ஆயிரம் கோடி வரை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிமுக வரலாற்றில் இதுவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கருத்தையே முதல்வரும் கூறியிருக்கிறார்.

தேர்தல் நேரத்தின்போது தான் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்பது தெரியும் அதிகுறித்து இப்போது கருத்து கூற இயலாது.

2 ஆவது தலைநகரம் குறித்து அரசு தான் முடிவு செய்யும். மேலும் இதுகுறித்து அமைச்சர்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளையே கூறி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.